மதுரை மல்லிகை தற்போது கிலோ நூற்று ஐம்பது ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
விழா காலமாக இருந்தபோதும் கடுமையான விலை சரிவு ஏற்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். மதுரை மாட்டுத்தாவணி அருகே ஒருங்கிணைந்த மலர் வணிக வளாகம் உள்ளது. திண்டுக்கல், தேனி, விருதுநகர், தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இருந்தும், மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதியிலிருந்தும் உற்பத்தியாகும் பூக்கள் அங்கு விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன.
இந்த நிலையில் தற்போது மலர் வணிக வளாகத்தில் நேற்று மல்லிகை ஒரு கிலோ ரூபாய் இருநூறுக்கு விற்பனை செய்யப்பட்டது. அதே போன்று முல்லை 150ரூபாய்க்கும், பிச்சி 200ரூபாய்க்கும், சம்பங்கி 50ரூபாய்க்கும், செவ்வந்தி 150ரூபாய்க்கும், அரளி 50ரூபாய்க்கும், செண்டுமல்லி 30ரூபாய்க்கும், ரோஜா 80 ரூபாய் என பிற பூக்களின் விலையும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. பூக்களின் விற்பனையும் மிக மந்தமாக நடைபெறுவதாக விவசாயிகள் , வியாபாரிகள் வேதனை தெரிவித்தனர்.