சாரதா நிதி நிறுவன மோசடி விவகாரம் தொடர்பாக முன்னாள் கொல்கத்தா போலீஸ் கமிஷனரை விசாரிக்க மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சாரதா நிதி நிறுவன மோசடி தொடர்பாக முன்னாள் கொல்கத்தா காவல் துறை ஆணையர் திரு. ராஜீவ் குமாரிடம் விசாரணை நடத்த அனுமதி கோரி சிபிஐ சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே திரு. ராஜீவ்குமாரிடம் விசாரணை நடத்திய சிபிஐ அதிகாரிகள், கடந்த ஆண்டு அவரை கைது செய்ய முயன்ற போது முதலமைச்சர் செல்வி மம்தா பானர்ஜி சிபிஐக்கு எதிராகப் போராட்டம் நடத்தியதால் கைது நடவடிக்கை தடைப்பட்டது.
அதன் பின்னர் பல முறை விசாரணைக்கு அழைக்கப்பட்ட போதும், திரு.ராஜீவ் குமார் சிபிஐ விசாரணையை தவிர்த்து விட்டார். இதனால் அவரிடம் கூடுதல் விசாரணைக்கு அனுமதி கோரி சிபிஐ உச்சநீதிமன்றத்தை அணுகியுள்ளது. கடந்த சில நாட்களாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மத்திய அரசை கடுமையாக எதிர்த்து வரும் நிலையில் தற்போது இந்த விவகாரம் தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளது.