விவசாயி வாங்கி வைத்திருந்த 1 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சோளத்தட்டு முழுவதும் தீயில் எரிந்து கருகிய சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்துள்ள நாச்சிபாளையம் ஊஞ்சக்காட்டில் வசித்து வரும் முருகேசன் என்பவர் விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில் இவர் வளர்த்து வரும் மாடுகளுக்கு தீவனத்திற்காக சோளத்தட்டு வாங்கி வீட்டிற்கு பின்புறம் வைத்திருந்தார். இந்த சோளத்தட்டு நேற்று இரவு திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது.
இதனையறிந்த முருகேசன் உடனடியாக திருச்செங்கோடு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். இதற்கிடையே தீ மளமளவென பரவியதால் சோளத்தட்டு முழுவதும் தீயில் கருகி சேதமடைந்துள்ளது. இதுகுறித்து திருச்செங்கோடு ஊரக போலீசார் வழக்குபதிவு செய்து சோளத்தட்டில் தீ பிடித்தது எப்படி என விசாரித்து வருகிறது. மேலும் இந்த தீ விபத்தில் 1 லட்சம் மதிப்புள்ள சோளத்தட்டு எரிந்தது குறிப்பிடத்தக்கது.