சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காடு நாகலூர் மலை கிராமத்தில் நிஷாந்த்-மாலதி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு பிறந்து 2 மாதமே ஆனால் ஆண் குழந்தை இருந்துள்ளது. கடந்த 15-ஆம் தேதி நிஷாந்த் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் கடைக்கு பொருட்கள் வாங்குவதற்காக சென்றுள்ளார். இதனையடுத்து தம்பதியினர் மளிகை பொருட்களை வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வந்த பிறகு மாலதி வீட்டை திறப்பதற்காக கணவரிடம் குழந்தையை கொடுத்துள்ளார். அப்போது ஒரு கையில் குழந்தையையும், மற்றொரு கையில் மளிகை பொருட்களையும் வைத்துக்கொண்டு நிஷாந்த் நின்ற போது ஒரு குரங்கு அருகில் வந்தது.
அந்த குரங்கு மளிகை பொருட்களை பறித்து கொண்டு ஓடியது. இதனை எதிர்பாராத நிஷாந்த் குழந்தையை கையில் வைத்துக் கொண்டே குரங்கை துரத்தி பிடிக்க முயன்ற போது கையில் இருந்து கை குழந்தை நழுவி கீழே தவறி விழுந்தது. இதனால் படுகாயமடைந்த குழந்தையை பெற்றோர் நாகலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக தூக்கி சென்றனர் இதனையடுத்து சேலம் அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட குழந்தை நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.