திமுக கட்சியை சேர்ந்த சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியின் எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் நேற்று அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். இவருக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை ஒதுக்கப்பட்டதோடு கூடுதலாக சிறப்பு திட்ட அமலாக்கத்துறை, வறுமை ஒழிப்பு திட்டங்கள் மற்றும் ஊரக கடன் துறைகளும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்றதற்கு பாஜக மற்றும் அதிமுகவினர் விமர்சித்து வருகின்றனர். அந்த வகையில் பாஜக தலைவர் அண்ணாமலையும் விமர்சித்திருந்தார்.
இந்த நிலையில் தொடர் உழைப்பின் பலனால் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்றதாக அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார். பேட்டி அளித்த அவர், பல லட்சம் இளைஞர்களை கவர்ந்து, தேர்தல் வெற்றிக்கு பாடுபட்டதாலே உதயநிதி அமைச்சரானார் என்றார். அண்ணாமலையின் விமர்சனம் குறித்த கேள்விக்கு, அரசியல் பள்ளியில் மழலை மாணவனுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை என்று விமர்சித்துள்ளார் செந்தில் பாலாஜி