நேற்று சென்னையை புரட்டிப்போட்ட மழை இன்று எந்தெந்த மாவட்டங்களில் பதம் பார்க்கப் போகிறது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக கடற்கரையை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஒரு சில இடங்களிலும், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது.
ஜனவரி 1-ஆம் தேதி முதல் கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் , டெல்டா மாவட்டங்கள் மற்றும் காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு நகரின் பல இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி முதல் 27 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். ஜனவரி இரண்டாம் தேதி முதல் நான்காம் தேதி வரை குமரி கடல் பகுதிகளில் பலத்த காற்று 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிக்கு கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.