நாகை மாவட்டத்தில் பருவ மழை ஓய்ந்த பின்னரும் மழைநீர் வடியாததால் பயிர்களை காப்பாற்ற முடியவில்லை என விவசாயிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பல்வேறு மாவட்டங்களில் கொட்டித் தீர்த்து வந்த நிலையில் தற்போது படிப்படியாக மழை குறைந்து வருகிறது. இதனை தொடர்ந்து நாகப்பட்டினம் அருகே உள்ள செல்லூர், பாறையூர், புலியூர், கீழ்வேளூர்,திட்டச்சேரி, கருங்கண்ணி,பட்டமங்கலம், வடக்கு வெளி ஆகிய பகுதிகளில் சுமார் 50 ஏக்கருக்கும் மேற்பட்ட விளைநிலங்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. மழை ஓய்ந்த பின்னரும் மழை வெள்ளம் வடியாததால் நடவு செய்த பயிர்கள் மழை வெள்ளத்தில் மூழ்கியுள்ளன என பெரும்பாலான விவசாயிகள் விரக்தியில் கூறியுள்ளனர்.
இது குறித்து தமிழக காவேரி விவசாயிகள் சங்க செயலாளர் ஸ்ரீதர் கூறியதாவது, நாகையில் வடகிழக்கு பருவ மழையின் தீவிரத்தால் கடந்த 9ஆம் தேதி முதல் 30 ஏக்கருக்கும் மேல் பயிரிடப்பட்டிருந்த நெல் பயிர்கள் சேதம் ஆகியுள்ளன. மழை நின்ற பின்பும் வயல்களில் உள்ள நீரை வடிய வைக்க முடியாமல் விவசாயிகள் திணறி வருகின்றனர். இதனையடுத்து சம்பா தாளடி நெற்பயிர்கள் முழுவதுமாய் சேதம் ஆனதால் விவசாயிகள் ஆழ்ந்த கவலையில் உள்ளனர். மேலும் பயிர்கள் முழுவதும் மூழ்கியதால் அவை அனைத்தும் இனி பதராக மாறுவதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.
எனவே இவை அனைத்திற்கும் அரசு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் விவசாயிகளின் துயர் தீர்க்க வேண்டும் என அவர் கூறியுள்ளார். மேலும் இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 30 ஆயிரம் வரை நஷ்ட ஈடாக வழங்க வேண்டும் என்று கூறிய அவர் கடந்த ஆண்டில் பயிர் காப்பீடு செய்த சில விவசாய நிலங்களுக்கும் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கூறியுள்ளார். நாகை மாவட்டத்தில் முழுவதும் வெள்ள நீர் வடிந்த பிறகு கணக்கெடுப்பு பணி தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் கூறினார்.