மழை காலத்தில் குழந்தைகள் எப்படி பாது காப்பது என இந்த செய்தி தொகுப்பில் காணலாம் :
மழைக் காலம் வந்தாலே நம் வீட்டில் உள்ள அம்மாக்களுக்கு ஏற்படும் பெரும் கவலை நோய்கிருமிகளிடம் இருந்து குழந்தைகளை பாதுகாக்க வேண்டும் என்பதும், அதற்கு இன்னும் நேரம் செலவாகும் என்பதும் தான். ஆனால் அது அவ்வளவு கஷ்டமான வேலை இல்லை.. நாம் செய்யும் அன்றாட வேலைகளில் சிறிது கவனம் செலுத்தினாலே போதுமானது தான்.
உடல் சுத்தம் :
மழைக்காலங்களில் குளித்தால் சளி, ஜலதோஷம் பிடிக்கும் என்று நினைக்க வேண்டாம். தினமும் பிள்ளைகளை குளிக்க வையுங்கள். குளிர்ந்த நீர் இல்லாமல் மிதமான சூட்டில் குளிக்க வைக்கலாம். பிள்ளைகளின் நகங்கள் வேகமாக வளரும் என்பதால் அடிக்கடி பார்த்து நகத்தை வெட்டி விடுங்கள். கை விரல்கள் மட்டுமல்லாமல் வெளியில் விளையாட செல்வதால் கால் விரல் நகங்களையும் வெட்டி விடுங்கள். சிறிய குழந்தைகளாக இருந்தால் காலையும் மாலையும் உடலை துடைத்து விடுங்கள்.
ஆடைகளிலும் கவனம் செலுத்த வேண்டும் :
மழைக்காலத்தில் காற்றில் உள்ள ஈரப்பதம் காரணத்தால் துணிகள் சரியாக காயாது. அதனால் வெயில் காலத்தில் அணியும் வகையில் இருக்கும் அரைக்கை சட்டை, ப்ராக் போன்ற உடைகளை குழந்தைகளுக்கு இந்த காலத்தில் அணிவது ஏற்றதல்ல. மழைக்காலங்களிலும் உடல் சில்லிட்டு போகிறதே என்று, தளர்வான உடைகளையும் அணிவிக்க கூடாது.
உணவு முறை :
மழைக்காலங்களில் கட்டாயம் வெளி உணவுகளைத் தவிர்க்க வேண்டும். உயர்தரமான ஹோட்டலாக இருந்தாலும் உணவுக்கு பயன்படுத்தும் தண்ணீரின் தன்மை கண்டிப்பாக உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் .அதே போன்று சாக்லெட், அதிக இனிப்புகள், குளிர்பானங்கள் போன்றவற்றையும் தவிர்த்து விடுங்கள். மாறாக தானியங்கள் நிறைந்த சத்துபானங்களைக் கொடுக்கலாம். இது உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
இதுல மட்டும் கைவைக்க விடாதீங்க :
மழைக்காலத்தில் சுவர் ஈரத்தை உறுஞ்சும். இதனால் சுவற்றில் ஈரம் இருக்கும். இது மின்சாரத்தைக் கடத்தும். அதனால் மின்சார சாதனங்களை சிறுவர்கள் தொடுவதற்கு அனுமதிக்காதீர்கள். மிக்ஸி, கிரைண்டர், ஃப்ரிட்ஸ் மட்டுமல்லாமல் லைட், ஃபேன் போன்றவற்றையும் போடுவதற்கு அனுமதிக்காதீர்கள். குழந்தைகள் விளையாடும் போதும் அவர்கள் மீது ஒரு கண் இருக்கட் டும்.