பள்ளி வளாகத்தில் தேங்கிய மழை நீரை வெளியேற்ற வலியுறுத்தி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனுமந்தபுரம் கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இங்கு 50-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக அப்பகுதியில் மழை பெய்ததால் பள்ளியின் மேற்கூரைகள் சேதமடைந்து மழை நீர் ஒழுகி பள்ளிக்கூடத்தில் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் சிரமப்படும் மாணவ மாணவிகள் காரிமங்கலம்- பாலக்கோடு சாலையில் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து அறிந்த தாசில்தார் சுகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பள்ளி வளாகத்தில் தேங்கி இருக்கும் மழைநீரை வெளியேற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்த பிறகு மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.