தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சென்னையின் முக்கிய சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல தேங்கி உள்ளது.அதனால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கையும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை, காஞ்சிபுரம்,செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணமாக தலா இரண்டாயிரம் ரூபாய் வழங்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை செய்து வருகிறது.
இதுதொடர்பாக தமிழக அரசின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், சென்னையில் கடந்த 2015ஆம் ஆண்டு ஏற்பட்ட பெரு வெள்ளத்தின் போது ரேஷன் அட்டைதாரர்களுக்கு வங்கி கணக்குகளில் தலா 5 ஆயிரம் நிவாரண தொகை வழங்கப்பட்டது. தற்போது ஏற்பட்டுள்ள பாதிப்புகளை முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்துள்ளார். அவரிடம் நிவாரண உதவிகளை வழங்குமாறு பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எனவே ரேஷன் கார்டு அடிப்படையில் மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 2000 ரூபாய் ரொக்கமாக வழங்கலாமா அல்லது ரேஷன் பொருட்களை இலவசமாக வழங்கலாமா என்பது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தலா ஐந்தாயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என்று பல அரசியல் கட்சி தலைவர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.அதனால் அரசு இதுகுறித்த அறிவிப்பை விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.