இன்று நாடு முழுவதும் பெருமைமிக்க மாசி மாத மஹாசிவராத்திரி கொடாடப்படுகிறது. இந்த சிவராத்திரி வெள்ளிக்கிழமையில் வருவது விசேஷத்திலும் விசேஷம். இன்று விரதம் கடைப்பிடித்து, இரவு முழுவதும் சிவ வழிபாட்டில் கலந்து கொண்டால், புண்ணியத்தின் மேல் புண்ணியம் சேரும் என்பது ஐதிகம்.
இன்று முழுவதும் சிவனுக்கு உபவாசம் இருந்து, சிவபுராணம் படித்து, நமசிவாய மந்திரத்தை உச்சரித்தபடி இறைவழிபாட்டில் ஈடுபடவேண்டும். எல்லா சிவாலயங்களிலும் மஹாசிவராத்திரியன்று, நான்கு கால பூஜை சிறப்பாக நடைபெறும்.
நான்கு ஜாமம் என்பது மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரையான காலகட்டமாகும். மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை முதல் ஜாமம். இரவு 9 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை இரண்டாம் ஜாமம். நள்ளிரவு 12 மணி முதல் முற்பகல் 3 மணி வரையானது, மூன்றாம் ஜாமம். அதைத் தொடர்ந்து காலை 6 மணி வரையான, மூன்று மணி நேரமும் நான்காம் ஜாமம் என்று பிரிக்கப்படுகிறது. இந்த நான்கு ஜாம பூஜை மற்றும் அதன் பலன்களைப் பற்றி இங்கே பார்க்கலாம்.
முதல் ஜாமம் (இரவு, 7:30 மணிக்கு)
முதல் ஜாம பூஜையின் போது படைக்கும் பிரம்மா, சிவப்பெருமானுக்கு செய்யும் பூஜை. பசும்பால், பசுந்தயிர், பசு நெய், கோமியம், கோசாணம் என பஞ்சகவ்யத்தால் அபிஷேகம் செய்து, தாமரை மலர்களால் அலங்காரம் செய்து, பாசிப்பருப்பு பொங்கல் நிவேதனமாக படைக்கப்படும். வில்வம் , பழம் முதல் நிவேதனமாக கொள்ளப்படுகிறது. நெய் தீபம் ஏற்றப்படும். ரிக் வேத பாராயணம் நடைபெறும். இக்கால பூஜை வழிபாடு, நம்முடைய பிறவிக் கர்மாக்களில் இருந்து விடுபட உதவும் என்பது ஐதிகம். இந்த நேரத்தில் சிவபெருமானை ரிக்வேத பாராயணம் செய்து வழிபட வேண்டும்.
இரண்டாவது ஜாமம் (இரவு 10:30 மணிக்கு)
காக்கும் கடவுளாகிய விஷ்ணு, சிவப்பெருமானுக்கு செய்யும் பூஜை. பஞ்சா பிஷேகத்தால் அபிஷேகம் செய்து, சந்தனக் காப்பு சாற்றப்படும். லட்டும், பாயசமும் நிவேதனமாக படைக்கப்படும். நல்லெண்ணெய் தீபத்துடன், யஜூர் வேத பாராயணம் நடத்தப்படும். இந்த பூஜையில் கலந்து கொண்டால், தன தான்ய சம்பத்துகள் தடையின்றி கிடைக்கும். விஷ்ணுவுக்கு உகந்த திருவோணம் நட்சத்திரம், இந்த சிவராத்திரி நாளில் கூடி வருவது கோடி புண்ணியம் தரவல்லது.
மூன்றாவது ஜாமம் (நள்ளிரவு 12:00 மணிக்கு)
சக்தியின் வடிவமான அம்பாள், சிவப்பெருமானுக்கு செய்யும் பூஜை. மகா சிவராத்திரியின் உச்ச கட்ட வழிபாட்டு நேரம் இது. இக்காலத்தில், தேனால் அபிஷேகம் செய்யப்படும். இது, லிங்கோத்பவ காலம் என்றும் அழைக்கப்படும். தாழம்பூ இந்நாளில் மட்டுமே சாற்றப்படும் என்பது சிறப்பு. சாம வேதம் ஓதப்படும். இந்த மூன்றாவது ஜாமத்தில் கலந்துகொண்டு பூஜிப்பதால், எந்த தீய சக்தியும் நம்மை நெருங்காமல் இருக்க அன்னை பார்வதி தேவி அருள்புரிவார். அதோடு சாமவேத பாராயணம் மற்றும் சிவ சகஸ்ர நாமம் உச்சரிக்க வேண்டும். தமிழ் வேதமான தேவாரத்தில் உள்ள ‘இருநிலனாய் தீயாகி..’ எனும் பதிகத்தையும் பாராயணம் செய்யலாம். இதனால் சகல பாவங்களும் நீங்குவதோடு, எந்த தீய சக்தியும் அண்டாது சிவசக்தியின் அருள் நம்மை காக்கும்.
நான்காவது ஜாமம் (அதிகாலை, 4:30 மணிக்கு)
முப்பத்து முக்கோடி தேவர்களும், முனிவர்களும், ரிஷிகளும், அசுர கணங்கள், மனிதர்கள் உலகில் சகல ஜீவராசிகளும் சிவனை பூஜிக்கும் காலம். கரும்புச்சாறு அபிஷேகத்துடன், குங்குமப்பூ சாற்றி அனைத்து வித மலர்களாலும் அர்ச்சிக்கப்படும். அதர்வண வேத பாராயணத்துடன், 18 விதமான சிறப்பு அலங்கார அபிஷேக பூஜைகள் செய்யப்பட்டு, சற்று நேரத்தில் உச்சிக்கால பூஜையும் முடித்து விடுவார்கள். அனைத்து மகிழ்ச்சிகளையும் அளிக்கும் இந்த நான்காம் ஜாம பூஜை. பொழுது புலரும் அதிகாலை வேளையில், அதர்வண வேத பாராயணம் செய்து சிவனை வழிபட வேண்டும். இதனால் நம் நியாயமான கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும். இல்லறம் நல்லறமாகும். பட்டங்களும், பதக்கங்களும், பதவியும் தேடி வரும்.
தொடர்ந்து 12 சிவராத்திரிகள் விரதமிருந்தால் முக்தி கிடைப்பதோடு அடுத்து வரும் 21 தலைமுறையினருக்கும் பலன் கிட்டும் என்பது குறிப்பிடத்தக்கது.