வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் மாங்கல்ய தோஷம் இருப்பதாக கூறி தாலிச் செயினை திருடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்தில் இருக்கும் கீரைத்துறை பகுதியை சேர்ந்தவர்கள் முருகன்-மாரியம்மாள் தம்பதியினர். முருகன் வேலைக்கு சென்றிருந்த போது மாரியம்மாள் மட்டும் தனியாக வீட்டில் இருந்துள்ளார். அச்சமயம் கையில் குடுகுடுப்பையுடன் காவி வேஷ்டி அணிந்து கொண்டு மூன்று பேர் கொண்ட கும்பல் அப்பகுதிக்கு வந்துள்ளது. அதில் 25 வயது மதிக்கத்தக்க இளைஞர் மாரியம்மாளிடம் உங்களுக்கு மாங்கல்ய தோஷம் இருப்பதாகவும் உடனடியாக பரிகாரம் செய்ய வில்லை என்றால் பெரும் அசம்பாவிதம் நடந்து விடும் என்றும் கூறியுள்ளார்.
இதனால் அவர்களை வீட்டிற்குள் அழைத்த மாரியம்மாள் பரிகாரம் குறித்து கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் 3 பேரும் புளி வேண்டும் என கேட்டுள்ளனர் அதோடு தாலிச் செயினை கழற்றி புளியில் வைத்து பூஜை செய்ய வேண்டும் என கூறியுள்ளனர். அவர்கள் கூறியதை நம்பிய மாரியம்மாள் தனது கழுத்தில் கிடந்த 3 பவுன் தாலிச் சங்கிலியை கழட்டி அவரிடம் கொடுத்துள்ளார்.
அதன்பிறகு மாரியம்மாளை திசை திருப்புவதற்காக குடிக்க தண்ணீர் வேண்டும் என கேட்டுள்ளனர். தண்ணீர் எடுக்க மாரியம்மாள் சென்ற சமயத்தில் மூன்று பேரும் தாலியுடன் தப்பிச்சென்றனர். இதனை தொடர்ந்து அதிர்ச்சி அடைந்த மாரியம்மாள் கீழக்கரை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சிசிடிவி கட்சிகளின் உதவியுடன் மூன்று பேரை தேடி வருகின்றனர்.