கோவிலில் திருடிய 3 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
அரியலூர் மாவட்டத்திலுள்ள பரணம் கிராமத்தில் இருக்கும் முந்திரி காட்டில் புகழ்பெற்ற ஆண்டவர் கோவில் அமைந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்ம நபர்கள் கோவிலுக்குள் புகுந்து வெண்கல மணிகள் மற்றும் உண்டியல் பணத்தை திருடி சென்றுள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மர்ம நபர்களை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் சந்தேகப்படும்படியாக சாக்கு மூட்டையுடன் அப்பகுதியில் சுற்றி திரிந்த 3 வாலிபர்களை காவல்துறையினர் மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது மாங்காய் பறிக்க வந்ததாக வாலிபர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து சாக்கு மூட்டையை காவல்துறையினர் சோதனை செய்து பார்த்தபோது அதில் 7 கோவில் மணிகள் இருந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர்கள் உடையார்பாளையம் காலனி தெருவில் வசிக்கும் நந்தா(18), பரமசிவம்(24), ஆதிஷ்(18) என்பதும் கோவில்களில் திருடியதும் தெரியவந்தது. இதனை அடுத்து வாலிபர்களிடம் இருந்த 7 வெண்கல மணிகளை காவல்துறையினர் கைப்பற்றினர். பின்னர் அவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.