வங்கக்கடலில் நாளை மீண்டும் புதிதாக காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நிவர் புயல் கடந்த வாரம் கரையை கடந்த நிலையில், தற்போது புரேவி புயல் தாக்கி கொண்டு இருக்கிறது. இதனையொட்டி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மும்மாரி பொழியும் நாட்டில், வாரத்திற்கு 3 புயல் அடித்துக் கொண்டு மக்களின் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதித்து வருகின்றது.
நிவர், புரேவி புயல் :
நவம்பர் இறுதியில் கடலில் நிவர் புயல் உருவாகி புதுச்சேரி மரக்காணம் இடையே கரையை கடந்தது. இதனால் பல இடங்களில் சேதங்கள் ஏற்பட்டன. மனிதர்கள் கால்நடைகள் உயிரிழந்தன. வீடுகள் தரைமட்டமாகின. இருப்பினும் பெரிய சேதத்தை ஏற்படுத்த வில்லை. வட மாவட்டங்களில் கனமழை பெய்தது. புயல் கரையை கடந்த அடுத்த சில நாட்களில் புரேவி என பெயரிட்டு புதிய புயல் நேற்று இரவு இலங்கையில் கரையை கடந்தது.
அப்போது வீசிய சூறாவளி காற்றால் தென்னிலங்கையில் பல இடங்களில் பல சேதம் ஏற்பட்டது. தற்போது தென் தமிழகத்தை நோக்கி வந்துகொண்டிருக்கின்றது. தென்மாவட்டங்கள் பாதுகாப்பு பணியை தீவிரப்படுத்தி வருகின்றன. நேற்று இரவு முழுவதும் விடிய விடிய மழை கொட்டியது. புரேவி புயல் கரையை கடக்கும் முன் மற்றொரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதிய புயல்
இதனையொட்டி தென்கிழக்கு வங்கக்கடலில், அதை ஒட்டியுள்ள அந்தமான் கடல் பகுதியில் நாளை காலை புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. நேற்று முன்தினம் அந்த பகுதியில் நிலவி வந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக டிசம்பர் 4ஆம் தேதி கடல் பகுதிக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் கேட்டுக்கொண்டது. இந்த புதிய புயல் குறித்த வீரியம், திசை ஆகியவை இன்னும் கணிக்கப் படவில்லை.
அடுத்தடுத்த புயல்கள் – என்ன காரணம்?
அடுத்தடுத்த புயல்கள், பெரு வெள்ளம் ஆகியவை இயற்கை நமக்கு அளிக்கும் எச்சரிக்கை. ஏன் அடிக்கடி புயல் வருகிறது. ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன என பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சார்ந்த சுந்தர்ராஜன் விளக்கியுள்ளார். தமிழகம் கடந்த ஆறு ஆண்டுகளில் தானே, ஓகி, கஜா,நிவர், புரேவி என்று வரிசையாக புயல்களை சந்தித்து வருகிறது. காலநிலை மாற்றமே இதற்கு காரணம்.
கடலின் வெப்பநிலை :
மனிதர்கள் வெளியிடக்கூடிய கார்பன் டை ஆக்சைடை கடல் வாங்கிக் கொள்கிறது. அதனால் கடலின் வெப்பநிலை அதிகரித்துக் கொண்டே உள்ளது. கடலில் வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் இருக்கும். ஆனால் தற்போது 29-30 டிகிரி செல்சியஸ் வரை உள்ளது. இது புயலாக மாற ஒரு முக்கிய காரணம். காலநிலை மாற்றங்களுக்கு ஏற்ப மனிதர்களும் மிகப்பெரிய அழிவுகளையும், சவால்களையும் சந்தித்து வருகின்றனர்.