முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் தாக்கல் செய்துள்ள மனுவில், 2006ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது தன்னுடைய வீட்டின் முன்பு சகோதரர் மற்றும் மைத்துனருடன் அமர்ந்து சி.வி சண்முகம் பேசிக் கொண்டிருந்ததாகவும், அப்போது திடீரென ஒரு கும்பல் அத்துமீறி உள்ளே நுழைந்து கொலை வெறி தாக்குதல் நடத்தியதாகவும், இதில் அவருடைய மைத்துனர் கொல்லப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதன் தொடர்ச்சியாக தனக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டதாகவும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் இந்த போலீஸ் பாதுகாப்பு திடீரென நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் அதுமட்டுமல்லாமல் தன்னுடைய துப்பாக்கி உரிமத்தை அரசு புதுப்பித்து தர மறுப்பதாகவும் அந்த மனுவில் கூறியுள்ளார்.
அதோடு பாதுகாப்பை நிறுத்தியதற்கான காரணத்தை கூற வேண்டுமென அந்த மனுவில் கூறியுள்ளார். இந்த மனு நீதிபதி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது இது குறித்து விசாரணை நடத்திய நீதிபதி சி.வி சண்முகத்துக்கு தற்போது எந்த அச்சுறுத்தலும் இல்லை எனவும் மத்திய மாநில உளவுத்துறை அறிக்கையிலும் சி.வி சண்முகத்திற்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என அறிக்கை கிடைத்துள்ளதாகவும், அதனால்தான் பாதுகாப்பை திரும்ப பெற்றதாகவும் தமிழக அரசு சார்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.