கோவை பாலக்காடு சாலை சுகுணாபுரத்தில் அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரான எஸ்.பி.வேலுமணி வசித்து வருகிறார். இவர் 2013 முதல் 2016ஆம் ஆண்டு வரை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சட்டம், நீதிமன்றங்கள் துறை அமைச்சராகவும், 2016 முதல் 2021 வரை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை அமைச்சராகவும் பதவி வகித்தார். கடந்த ஆகஸ்ட் மாதம் லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் எஸ்.பி.வேலுமணியின் வீடு உள்ளிட்ட 60 இடங்களில் சோதனை மேற்கொண்டனர்.
அந்த சோதனையின் முடிவில் 13 லட்சத்து 8 ஆயிரத்து 500 ரொக்கம், முக்கிய ஆவணங்கள், தனியார் நிறுவனங்களுடனான பரிவர்த்தனை ஆவணங்கள், 2 கோடி ரூபாய் அளவுக்கு வைப்புத்தொகை, ஹார்ட் டிஸ்குகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் எஸ்.பி.வேலுமணியின் வீடு உள்ளிட்ட இடங்களில் இன்று(மார்ச்15) மீண்டும் லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன்படி கோவை மற்றும் சேலம் உள்ளிட்ட மாநிலம் முழுவதும் 6 மாவட்டங்களில் உள்ள 58 (கோவையில் மட்டும் 41 இடங்கள்) இடங்களில் சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன் கேரளாவில் உள்ள வீட்டிலும் சோதனை நடைபெறுகிறது .
அதுமட்டுமல்லாமல் வருமானத்திற்கு அதிகமாக ரூ.58.23 கோடி அதாவது 3928 சதவீதம் கூடுதலாக சொத்து குவித்ததாக எஸ்.பி.வேலுமணி மீது மீண்டும் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் 10 பேர் மற்றும் 3 நிறுவனங்கள் மீதும் லஞ்ச ஒழிப்பு துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில் எஸ்.பி.வேலுமணி வீட்டின் முன் அவரது ஆதரவாளர்கள் திரண்டு வருகின்றனர்.