மாஜி அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உட்பட 17 பேர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. மேலும் வேலுமணி மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தி ரூபாய் 100 கோடிக்கும் மேற்பட்ட நிரந்தர வைப்புத் தொகைக்கான வங்கி ரசீதுகளை பறிமுதல் செய்தது. வழக்கு விசாரணை முடியும் வரை லஞ்ச ஒழிப்பு துறை சார்பில் நிரந்தர வைப்பீடுகளை முடக்கக்கோரி சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவானது நீதிபதி ஜே.ஓம்பிரகாஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்த போது, லஞ்ச ஒழிப்புத்துறை குற்றவியல் நடைமுறைப்படி மனுத்தாக்கல் செய்யவில்லை என்று எஸ்.பி.வேலுமணி தரப்பில் கூறப்பட்டது. இதையடுத்து ஏப்ரல் 5-ம் தேதி வரை குற்றவியல் நடைமுறைப்படி கூடுதல் மனு தாக்கல் செய்ய நீதிபதி லஞ்ச ஒழிப்புத் துறைக்கு அவகாசம் வழங்கினார். அதுவரை நிரந்தர வைப்புத் தொகைகளை முடக்கி பிறப்பிக்கப்பட்ட உத்தரவை நீட்டித்தார்.