சென்னையில் மாடியில் இருந்து குதித்து இன்ஜினியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை தண்டையார்பேட்டை ஆர்டிஓ அலுவலகம் அருகே மிக்சர் வியாபாரியான அன்பு என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் சுதர்சன் இன்ஜினியரிங் மெக்கானிக் பட்டதாரியான இவர் கடந்த மூன்று வருடங்களாக அம்பத்தூர் ஓரகடம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் டிசைனிங் இன்ஜினியராக பணிபுரிந்து வருகின்றார். இவர் கடந்த சில நாட்களாக வீட்டில் இருந்த படி பணிபுரிந்து வந்த சூழலில் விடுமுறை தினமான நேற்று முன்தினம் சலூன் கடைக்கு சென்று முடிவெட்டி விட்டு வந்ததை அடுத்து செல்போனை வைத்துவிட்டு வீட்டிலிருந்து சென்றவர் வீடு திரும்பவில்லை என கூறப்படுகின்றது.
நீண்ட நேரமாகியும் மகனை காணாததால் பதறிப்போன பெற்றோர்கள் உறவினர் வீடுகள் உட்பட பல இடங்களில் தேடியுள்ளனர். எங்கும் கிடைக்காததால் வீட்டிற்கு திரும்பி வந்த பெற்றோர்கள் சுதர்சனின் செருப்பு வீட்டில் கிடப்பதை கண்டு மொட்டை மாடியில் சென்று தேடிப் பார்த்தனர். அதன் பின் அங்கு சென்று பார்த்தபோது வீட்டின் பின்புறம் உள்ள ஆர் டி ஓ அலுவலகம் முன்புறம் வளாகத்தில் ரத்த வெள்ளத்தில் சுதர்சன் கிடைப்பதை பார்த்த பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவரது உடலை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.
இந்த சம்பவம் பற்றிய தகவல் அறிந்ததும் புது வண்ணாரப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் வானாமலை சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுதர்சனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டாலின் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனை அடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் சுதர்சன் தனது வீட்டில் மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் பற்றி புது வண்ணாரப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து சுதர்சன் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.
இதேபோன்று வளசரவாக்கம் பழனியப்பா நகர் பகுதியில் சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சினிமா துறையில் ஒலிப்பதிவாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகள் அரித்தா ராஜேஸ்வரி பட்டப்படிப்பு முடித்த இவர் நேற்று முன்தினம் இரவு தனது அறைக்குள் சென்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது பற்றி வளசரவாக்கம் இன்ஸ்பெக்டர் ஆபிரகாம் குரூஸ் தலைமையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.