சென்னையில் 3-வது மாடியில் இருந்து புடவையை கட்டி இறங்கிய இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த பழனிவேல் என்பவரது மகள் மகிழ்மதி. இவர் சென்னை ஜாம்பஜாரில் தங்கி நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் சிவில் தேர்வு பயிற்சி மையத்தில் ஐஏஎஸ் தேர்வுக்கு படித்து வருகிறார். நேற்று மதியம் வீட்டுக்கு அவரது நண்பர் ராஜ்குமார் வந்து தங்கியுள்ளார். அதன் பிறகு மகிழ்மதி பயிற்சி மையத்திற்கு சென்றுள்ளார். பின்னர் மாலை வகுப்பு முடிந்து வீட்டுக்கு வந்த போது கதவு உள்பக்கமாக பூட்டி இருந்தது. கதவை தட்டியும் ராஜ்குமார் திறக்கவில்லை.
ராஜ்குமாரின் செல்போனுக்கு போன் செய்தபோது அவர் அதை எடுக்கவில்லை. இதனால் பதறிப்போன மகிழ்மதி பின்பக்க வழியாக பால்கனிக்கு சென்று வீட்டுக்குள் நுழைய திட்டமிட்டார். அதன்படி புடவையை இடுப்பில் கட்டிக்கொண்டு மூன்றாவது மாடியில் இருந்து இறங்கிய போது திடீரென புடவை அருந்து மூன்றாவது மாடியிலிருந்து கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராஜீவ்காந்தி மருத்துவமனை அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து ஆண் நண்பரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.