ஓட்டுனரின் வீட்டிற்குள் புகுந்து திருட முயன்ற வாலிபரை அக்கம்பக்கத்தினர் மடக்கி பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
தேனி மாவட்டம் கம்பம் மாலையம்மாள்புரம் பகுதியில் ஹரிமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் சம்பவத்தன்று இரவு இவர் தனது குடும்பத்தினருடன் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது வீட்டின் மாடிப்படி வழியாக மர்மநபர் ஒருவர் வீட்டுக்குள் புகுந்து ஹரிமூர்த்தியின் செல்போன் மற்றும் பணத்தை திருடி விட்டு அங்கிருந்து தப்பியோட முயன்றார். இதனை பார்த்த ஹரிமூர்த்தி உடனடியாக கத்தி கூச்சலிட்டு அக்கம்பக்கத்தினரை உதவிக்கு அழைத்துள்ளார்.
இதனை கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் திருட வந்த வாலிபரை மடக்கி பிடித்து கம்பம் வடக்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். இது குறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர் கம்பம் வள்ளுவர் தெருவை சேர்ந்த ஹரிஷ்குமார் (19) என்பது தெரியவந்துள்ளது. மேலும் வாலிபரை கைது செய்து நடத்திய விசாரணையில் ஹரிஷ்குமார் ஏற்கனவே பல்வேறு திருட்டு வழக்குகளில் கைதாகி சிறைக்கு சென்று வந்தவர் என தெரியவந்தது.