மாட்டுகொட்டகை அமைத்து தருவதாக கூறி 8 பேரிடம் இருந்து 10 லட்சம் ருபாய் ஏமாற்றிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் பெருங்குளம் பகுதியில் முனீஸ்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ராமநாதபுரம் நகரில் உள்ள தனியார் வங்கியின் சார்பில் மாட்டுக் கொட்டகைகள் அமைப்பதற்கு கடன் உதவி வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அறிந்த முனீஸ்குமார் மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களுக்கு சென்று தன்னை வங்கியின் பிரதிநிதி என அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளார். இதனையடுத்து மாட்டுக் கொட்டகை அமைப்பதற்கு வங்கியின் சார்பில் கடன் பெற்று தருவதாக கூறி பலருடைய நில ஆவணங்களை பெற்றுக் கொண்டுள்ளார்.
இதனைதொடர்ந்து அந்தந்த நபர்களின் பெயரில் வங்கியில் கடனுக்கு விண்ணப்பித்து அதற்க்கான ஒப்புதலையும் வாங்கியுள்ளார். மேலும் வங்கியில் இருந்து விண்ணப்பதாரர்களின் வங்கி கணக்கிற்கு கடன் தொகையும் போடப்பட்டுள்ளது. அப்போது அவர்களிடம் சென்று நானே மாட்டுகொட்டைகை அமைப்பதற்கு ஏற்பாடு செய்து தருகிறேன் என்று கூறி பணத்தை முனீஸ்வரன் தனது வங்கி கணக்கிற்கு மாற்றிக்கொண்டுள்ளார். இதனையடுத்து பணம் பெற்றுக்கொண்டு மாட்டுகொட்டகை அமைக்காமல் ஏமாற்றியுள்ளார்.
இந்நிலையில் பணம் கொடுத்து எமார்ந்தவர்களில் ஒருவரான பெரியபட்டினம் மரைக்காயர் நகரை சேர்ந்த குப்பம்மாள் ராமநாதபுரம் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் முனீஸ்வரன் 8 பேரிடம் இதேபோல் மாட்டுகொட்டகை அமைத்து தருவதாக கூறி 10 லட்சம் வரை ஏமாற்றியது வெளிவந்துள்ளது. மேலும் காவல்துறையினர் முனீஸ்குமார் மீது வழக்குபதிவு செய்து தலைமறைவான அவரை வலைவீசி தேடி வருகின்றனர்.