தோல் பதப்படுத்தும் குடோனில் திடீரென அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலின் அருகே தோல் பதப்படுத்தும் குடோன் ஒன்று அமைந்துள்ளது. இங்கு ஆட்டு தோல், மாட்டு தோல் மற்றும் மாட்டு இரைப்பை போன்றவைகள் பதப்படுத்தப்பட்டு வெளி மாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது. அங்கிருந்து வெளி நாடுகளுக்கு அனுப்பப்படும். இங்குள்ள மாட்டு இரைப்பை சுகாதார மற்ற முறையில் பதப்படுத்தப் பட்டு உணவுக்கு பயன்படுத்தப்படுவதாக அப்பகுதி மக்கள் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலரிடம் புகார் செய்துள்ளனர்.
அந்த புகாரின் படி உணவு பாதுகாப்புத்துறை அலுவலர், கிராம நிர்வாக அலுவலர் உள்பட சில அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது மாட்டு இரைப்பை பதப்படுத்தப்பட்டு சாக்குகளில் பேக்கிங் செய்யப்பட்டு வெளி மாநிலங்களுக்கு அனுப்புவதற்கு தயாராக வைக்கப்பட்டிருந்தது. இதில் மொத்தம் 2 1/4 டன் இருந்தது. இதை அதிகாரிகள் ஆய்வு செய்த போது சுகாதார மற்ற முறையில் பதப்படுத்தப்பட்டது தெரிய வந்தது. எனவே மாட்டு இரைப்பை உணவுக்கு உகந்ததா என்பதை ஆய்வு செய்ய அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதன் காரணமாக 2 1/4 டன் உள்ள 12 லட்சம் மதிப்புள்ள இரைப்பையை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.