மாட்டு வண்டி போட்டியில் பலியானவரின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் மாவட்ட திமுக செயலாளர் அப்துல் வகாப் எம்எல்ஏ தலைமையில் அம்பையில் மாட்டுவண்டி போட்டியில் இறந்த மாடசாமி என்பவரின் மகன் சிவசூரியன், மகள் செல்வராணி, யூனியன் கவுன்சிலர் இன்பராஜ், தெற்கு ஒன்றிய செயலாளர் கல்லூர் மாரியப்பன் உள்ளிட்டோர் நேற்று ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று மாடசாமியின் மனைவி மகாலட்சுமி பெயரில் மனு ஒன்றை கொடுத்தனர்.
அதில் அவர்கள் கூறியுள்ளதாவது, சென்ற 5-ஆம் தேதி அம்பையில் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு நடந்த மாட்டு வண்டி போட்டியில் எனது கணவர் மாடசாமி பங்கேற்றப்போது மாட்டு வண்டியில் இருந்து கீழே தடுமாறி விழுந்ததில் தலையில் அடிபட்டு உயிரிழந்தார். அவருடைய வருமானத்தை நம்பியே எங்கள் குடும்பம் இருந்து வந்த நிலையில் அவர் இறந்து விட்டதால் மிகவும் சிரமப்படுகின்றோம். குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகவே இருக்கின்றது. ஆகையால் எங்கள் குடும்பத்திற்கு நிவாரண உதவி வழங்க வேண்டும். மேலும் எனக்கு அரசு வேலை கிடைக்க பரிந்துரைக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.