புலி மாட்டை கடித்து கொன்ற சம்பவம் பொதுமக்களிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பக்கத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. கடந்த சில நாட்களாக விவசாய தோட்டத்திற்குள் நுழையும் சிறுத்தை மற்றும் புலிகள் கால்நடைகளை வேட்டையாடுகின்றன. இந்நிலையில் கணேசபுரம் பகுதியில் விவசாயியான சக்திவேல்(54) என்பவர் வசித்து வருகிறார். இவர் மேச்சலுக்காக கட்டியிருந்த மாடுகளை வீட்டிற்கு ஓட்டி வருவதற்காக சென்றுள்ளார்.
அப்போது கழுத்து பகுதியில் ரத்த காயங்களுடன் ஒரு மாடு இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த சக்திவேல் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் அங்கு பதிவாகி இருந்த கால் தடயங்களை ஆய்வு செய்த போது அது புலியின் கால் தடம் என்பது உறுதியானது. இதனால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். மேலும் வனத்துறையினர் அங்கு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.