Categories
மாநில செய்திகள்

“மாணவச் செல்வங்களுக்கான சிறப்பான நலத்திட்டம்” முதல்வரின் பொன்னான அறிவிப்பு…. காலை சிற்றுண்டி திட்டத்தின் சிறப்புகள்…..!!!!

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தமிழகத்தில் உள்ள 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். நம்முடைய முதல்வர் பெண்கள் மற்றும் குழந்தைகளின் நலனுக்காக பல்வேறு விதமான நலத்திட்டங்களை அறிவித்து வருகிறார். அந்த வகையில் தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்றவுடன் பேருந்தில் பெண்களுக்கு இலவச பயணம் என்று அறிவித்தார். அதேபோன்று கல்லூரி மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூபாய் 1000 உதவி தொகையையும் அறிவித்தார். இந்நிலையில் தற்போது பெண்களை கருத்தில் கொண்டே குழந்தைகளுக்கான காலை உணவு திட்டமும் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.

அதாவது பெண்கள் தங்கள் குழந்தைகள் பள்ளிகளில் சத்தான உணவை சாப்பிடுகிறார்கள் என்ற அமைதியான மனநிலையில் இருக்க வேண்டும் என்பதற்காக தான் சத்துணவு திட்டம் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் ஸ்டாலின் அசோக் நகர் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிக்கு சென்றிருந்தார். அப்போது 2 பெண் குழந்தைகளிடம் காலை உணவு சாப்பிட்டீர்களா என்று கேட்டபோது அவர்கள் சாப்பிடவில்லை என கூறியுள்ளனர். இதனால் மிகவும் வேதனை அடைந்த தமிழக முதல்வர் ஸ்டாலின் 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான குழந்தைகளுக்கு காலை உணவு திட்டத்தை அறிவித்தார். இந்த காலை உணவு குழந்தைகளுக்கு சத்தான முறையில் இருக்க வேண்டும் என்பதற்காக பூச்சிக்கொல்லி மருந்து போடாத ஆர்கானிக் காய்கறிகளை வைத்து சமைக்கப்படுகிறது.

அதோடு உணவு உலகத்தில் கின்னஸ் சாதனை படைத்த மாஸ்டர் தாமு அவர்களால் பயிற்சி அளிக்கப்பட்ட நபர்களால் மட்டுமே குழந்தைகளுக்கு உணவுகள் சமைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 1920-ம் ஆண்டு சர் பிட்டி தியாகராயர் முதன்முதலாக மதிய உணவு திட்டத்தை அறிமுகப்படுத்தினார். கடந்த 1957-ம் ஆண்டு பெருந்தலைவர் காமராஜர் மாநிலம் முழுதும் உள்ள அனைத்து தொடக்கப் பள்ளிகளிலும் மதிய உணவு திட்டத்தை அறிமுகப் படுத்தினார். கடந்த 1982-ம் ஆண்டு முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் அவர்களால் தொடக்கப் பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கும் சத்தான உணவு திட்டம் உறுதி செய்யப்பட்டது. இந்த திட்டம் பின்னர் நகர்ப்புறங்களுக்கும் நீடிக்கப்பட்டு கடந்த 1984-ம் ஆண்டு முதல் 10 முதல் 15 வயது வரை குழந்தைகளுக்கும் சத்துணவு திட்டம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

கடந்த 1989-ம் ஆண்டு முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி  மாணவர்களுக்கு சத்துணவு திட்டத்தின் கீழ் அவித்த முட்டை வழங்கப்படும் எனவும் முட்டை சாப்பிடாத குழந்தைகளுக்கு வாழைப்பழம் வழங்கப்படும் எனவும் அறிவித்தார். கடந்த 2013-ஆம் ஆண்டு அம்மா ஜெயலலிதா அவர்கள் குழந்தைகளின் விருப்பத்திற்கு ஏற்ப மசாலா முட்டைகளுடன் பல்வேறு விதமான உணவுகளையும் சத்துணவு திட்டத்தில் சேர்த்தார். இந்த சத்துணவு திட்டம் தற்போது 43,243 மதிய உணவு மையங்களின் மூலம் 48.57 லட்சம் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.

மேலும் நம்முடைய தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த மே மாதம் பள்ளி குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்து, தமிழக அரசே முழு செலவையும் ஏற்கும் என்ற பொன்னான அறிவிப்பையும் வெளியிட்டார். இந்தியாவிலேயே முதன் முதலாக காலை உணவு திட்டம் அறிவிக்கப்பட்டு அனைத்து மாநிலங்களுக்கும் முன்னோடியாக திகழ்வதோடு, அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளைப் போன்று குழந்தைகளின்ஆரோக்யத்தில் அதிக அக்கறை செலுத்தும் மாநிலமாக தமிழகம் உயர்ந்துள்ளது.

Categories

Tech |