கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகேயுள்ள அங்குசெட்டிப் பாளையம் இருளர் குடியிருப்பில் வசித்து வருபவர் முருகன் (38). இவரது மனைவி சுமதி (32). இவர்களுக்கு லதா (11), நந்தினி (7) ஆகிய 2 மகள்கள் இருக்கின்றனர். மேலும் அர்ஜூனன் என்ற 14 வயதுமகனும் இருந்தான். இவர்களில் அர்ஜூனன் அங்குசெட்டிப்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்தார். இதற்கிடையில் முருகன் சிறுவத்தூரிலுள்ள ஒரு செங்கல் சூளையில் குடும்பத்தினருடன் தங்கியிருந்து வேலை பார்த்து வருகிறார்.
இதில் முருகன் அடிக்கடி மதுகுடித்துவிட்டு வீட்டுக்கு வருவதால் கணவன்-மனைவி இடையில் குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு மீண்டும் முருகன் மதுகுடித்துவிட்டு வந்து சுமதியிடம் தகராறு செய்ததாக தெரிகிறது. இதனை பார்த்து ஆத்திரமடைந்த அர்ஜூனன், தன் தந்தையிடம் ஏன் இப்படி மதுகுடித்துவிட்டு வந்து அம்மாவிடம் தகராறு செய்து வருகிறீர்கள் என கூறி தட்டிக்கேட்டுள்ளான். அதன்பின் முருகன் அங்கிருந்து சென்றுவிட்டார். அதனை தொடர்ந்து அர்ஜூனன் வீட்டில் படுத்து உறங்கினான்.
பின் நள்ளிரவு 1 மணியளவில் மீண்டும் மதுகுடித்துவிட்டு முருகன் வீட்டுக்கு வந்து மனைவியிடம் தகராறு செய்து அவரை தாக்க முயற்சி செய்துள்ளார். அப்போது அவரிடமிருந்து சுமதி தப்பிஓடிவிட்டார். இதனிடையில் மது போதையில் ஆத்திரத்தின் உச்சத்திலிருந்த முருகன் தன் மகன் என்றும் பாராமல் அங்கு உறங்கிகொண்டிருந்த அர்ஜூனனின் தலையில் குழவி கல்லை தூக்கிப்போட்டார். இதனால் அர்ஜூனன் தலைநசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இது தொடர்பாக தகவலின்படி புதுப்பேட்டை காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று அர்ஜூனன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன் இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து முருகனை கைது செய்தனர். இவ்வாறு மது போதையில் பெற்ற மகன் மீது குழவி கல்லை தூக்கிப்போட்டு தந்தையே கொலைசெய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.