ராட்சத அலையில் சிக்கி மாயமான மாணவனை தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக தேடி வருகின்றனர்.
சென்னை மாவட்டத்திலுள்ள தண்டையார்பேட்டை பகுதியில் ஏஜாஸ்(17) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். இந்நிலையில் ஏஜாஸ் தனது நண்பர்களான மகேஷ்குமார், கிஷோர்குமார், ஜெகதீஸ் ஆகியோருடன் காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் கடலில் இறங்கி குளித்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென தோன்றிய ராட்சத அலை ஏஜாஸை கடலுக்குள் இழுத்துச் சென்றது.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சக மாணவர்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கும், காவல்துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் மீனவர்கள் உதவியுடன் மாயமான மாணவரை தீவிரமாக தேடி வருகின்றனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.