கடலூர் மாவட்டத்தில் உள்ள கூடுவேலி சாவடியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் கண்ணகி என்பவர் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சரியாக படிக்கவில்லை என கூறி 2- ஆம் வகுப்பு படிக்கும் மாணவரின் தலையில் கண்ணகி அலுவலக பயன்பாட்டிற்காக இருக்கும் பைல் போல்டரில் வரும் பிளாஸ்டிக் குச்சியை வைத்து அடித்து திட்டியுள்ளார். இதனை ஒருவர் செல்போனில் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் வெளியிட்டார். இதனை அறிந்த போலீசார் மாணவனின் பெற்றோரை அழைத்து சென்று விசாரித்தனர்.
அப்போது மகனின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு கண்டித்து பாடம் சொல்லி கொடுக்குமாறு அந்த ஆசிரியரிடம் கூறினோம். அதனால் தான் அவர் மகனை கண்டித்துள்ளார். இது தொடர்பாக எந்தவித நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என அவர்கள் எழுதிக் கொடுத்தனர். இதற்கிடையே மாவட்ட தொடக்கப்பள்ளி அலுவலர் சுகப்பிரியா ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.