12-ஆம் வகுப்பு மாணவன் கடத்தப்பட்ட வழக்கில் உறவினரை போலீசார் கைது செய்தனர்.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஆவின் நகரில் 17 வயது சிறுவன் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாணவன் உறவினர் ஒருவருடன் சினிமா பார்ப்பதற்காக சென்றுள்ளார். இதனை அடுத்து வீடு திரும்பும் போது மர்ம நபர்கள் சிறுவனை காரில் கடத்தி சென்று அவரது தந்தையை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு 1 கோடி ரூபாய் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் சோதனை சாவடிகளில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் மர்ம நபர்கள் மாணவனை ஓசூர் அருகே இறக்கிவிட்டு தப்பி சென்றனர். அவரை ஓசூர் சிப்காட் போலீசார் மீட்டு தர்மபுரி போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதனைத் தொடர்ந்து மாணவரின் உறவினரான பாலாஜி என்பவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் மாணவனை கடத்திய விவகாரத்தில் அவருக்கும் தொடர்பு இருப்பது உறுதியானது. இதனால் நேற்று பாலாஜியை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக இருக்கும் மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.