மாணவர்களின் வழிகாட்டியாக போற்றப்படும் மக்கள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாமின் பிறந்த நாளை முன்னிட்டு அனைவரும் அவருக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.
நாட்டின் தலைசிறந்த விஞ்ஞானி மற்றும் மாணவர்களின் வழிகாட்டி என்று போற்றப்படும் டாக்டர் அப்துல் கலாமின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அதனையொட்டி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், திரைப் பிரபலங்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் மாணவர்கள் என அனைவரும் அப்துல் கலாம் நினைவுகளை பகிர்ந்து அவருக்கு மரியாதை செலுத்திக் கொண்டிருக்கின்றனர்.அது மட்டுமன்றி அவரின் புகைப்படங்கள் மற்றும் மாணவர்களுக்கு கூறிய ஆலோசனைகள் அனைத்தும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் அப்துல் கலாம் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்து பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் வெளியிட்டுள்ள செய்தியில், “புதிய மற்றும் வலிமையான இந்தியா என்ற மிகப்பெரிய கனவை நினைவாக்குவதற்காக நாட்டின் எதிர்காலத்தை கட்டமைக்க அப்துல் கலாம் தனது முழு வாழ்க்கையும் அர்ப்பணித்துள்ளார். அவர் நம் தலைமுறையினருக்கும் ஊக்கமளிக்கும் நல்ல அறிவுரைகளை கூறியுள்ளார். அவரின் பிறந்த நாளில் அவருக்கு நான் மரியாதை செலுத்துகிறேன்”என்று அவர் கூறியுள்ளார்.