மாணவர்களின் கல்விக் கடன்களை மத்திய அரசு தள்ளுபடி செய்ய வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளது.
வெளிநாடு சென்று மருத்துவம் பயில்வதற்காக வங்கிகளில் பெற்ற கடன்களை எவ்வித நிபந்தனையும் இன்றி முழுவதுமாக தள்ளுபடி செய்ய வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியபோது, உக்ரைன் நாட்டில் ஏற்பட்டுள்ள கொடும் போர் சூழலில் சிக்கி உயிர் பிழைத்து வந்துள்ள இந்திய மாணவ, மாணவியரை அந்தந்த மாநிலங்களில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்த மருத்துவ படிப்பை தொடர்வதற்கு இந்திய மருத்துவ கழகம் உரிய அனுமதி அளிக்க வேண்டும்.
நீட் தேர்வு காரணமாகவும், மிக அதிக கல்விக் கட்டணம் காரணமாகவும் இந்தியாவில் மருத்துவம் படிப்பதற்கான வாய்ப்புகள் மறுக்கப்பட்ட நிலையில், உக்ரைன் சென்று மருத்துவ படிப்பை பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மாணவ செல்வங்கள் தற்போது நிலவும் கடும் போர் காரணமாக தாயகத்திற்கு திரும்ப வேண்டிய இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மிக ஆபத்தான இந்த போர் தாக்குதலிலிருந்து ஊன், உறக்கமின்றி ,நொடிப்பொழுதில் உயிர் தப்பி வந்த மாணவச் செல்வங்கள் மனதளவிலும் உடலளவிலும் மிகுந்த பாதிப்படைந்துள்ளனர். அதுமட்டுமின்றி மருத்துவ கல்வியை மீண்டும் தொடர முடியுமா? என்ற பயத்தால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கின்றனர்.
தற்போதைய சூழலில் ரஷ்யா, உக்ரைன் போர் விரைவில் முடிவுற்றாலும், எதிர்காலத்தில் மீண்டும் எப்போது வேண்டுமானாலும் போர் நடக்கக்கூடிய பதட்டமான அரசியல் சூழ்நிலை நிலவுவதால் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை மீண்டும் வெளி நாட்டிற்கு அனுப்ப தயக்கம் காட்டுகின்றனர். இதனால் மாணவர்களின் எதிர்காலம் மிகப்பெரிய கேள்விக்குறி ஆகியுள்ளது. மேலும் தாயகம் திரும்புவதற்கான மாணவ, மாணவியர் பெரும்பணம் இழப்பை சந்தித்து பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிப்பதனால் அவர்கள் வெளிநாடு சென்று மருத்துவம் பயில்வதற்கு பெற்ற கடன்களை எவ்வித நிபந்தனையுமின்றி முழுவதுமாக தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் அதில் கூறப்பட்டிருந்தது.