மாணவர்களுக்கான சிறப்பு பஸ்கள் கூடிய விரைவில் இயக்கப்படும் என கவர்னர் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி மாநில கவர்னர் தமிழிசை சௌந்தர்ராஜன் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி கொடுத்துள்ளார். அதில் 75-ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு 75 பள்ளிகளுக்கு செல்ல இருக்கிறேன். இன்று 5 பள்ளிகளுக்கு சென்று மாணவர்களோடு சேர்ந்து மதிய உணவு அருந்துவதற்கு திட்டமிட்டுள்ளேன் என்றார். இதனையடுத்து ஒவ்வொரு பள்ளிகளுக்கும் செல்ல இருப்பதால் பள்ளிகளில் உள்ள குறைபாடுகளை தெரிந்து கொண்டு சரி செய்ய முடியும்.
அதன் பிறகு சுகாதாரத் துறையையும், கல்வித்துறையையும் நவீனமயமாக்குதல் தொடர்பாக முதலமைச்சரை சந்தித்து பேசி இருக்கிறேன் என்றும், பிரதமரின் வருகையை முன்னிட்டு தெலுங்கானா மாநிலத்திற்கு சென்றதால் காரைக்காலுக்கு என்னால் செல்ல முடியவில்லை என்றார்.
இதனையடுத்து வாந்தி மற்றும் பேதியை தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுவதால் பொதுமக்கள் யாரும் கவலைப்பட வேண்டாம். மேலும் பள்ளி மாணவர்களின் பேருந்துகளை இயக்குவது தொடர்பாக டெண்டர் விடப்பட்டுள்ளது. எனவே 10 நாட்களுக்குள் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். மேலும் புதுச்சேரியில் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் மேற்கொள்ளப்பட இருக்கிறது என்றும் கூறினார்.