சேதமடைந்த பள்ளி கட்டிடங்கள் இடிக்கப்படும் பொழுது பள்ளியில் பயிலும் மாணவர்கள் அருகில் உள்ள பள்ளியில் அமர்ந்து கல்வி பயில வழிவகை செய்ய வேண்டும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது: “கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு நெல்லையில் பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் 3 மாணவர்கள் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதைத் தொடர்ந்து அனைத்து மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளின் கட்டிடங்களை ஆய்வு செய்து அதில் உறுதி தன்மை இல்லாத கட்டிடங்களை இடிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவின் பெயரில் உறுதி தன்மை இல்லாத கட்டிடங்கள் இடிக்கப்பட்டு வருகின்றன. தற்போது பள்ளி மாணவர்கள் பள்ளிக்கு வரும் சூழலில் அருகில் உள்ள பள்ளியில் மாணவர்களை அமர வைத்து கல்வி பயில வழிவகை செய்ய வேண்டும். இல்லையெனில் வாடகை கட்டிடத்தில் வகுப்புகள் தொடர வேண்டும்” என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.