கஞ்சா விற்பனை செய்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புதுச்சேரியில் ஆபரேஷன் விடியல் என்ற பெயரில் கஞ்சா விற்பனையை தடுப்பதற்கான நடவடிக்கைகளில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் விவிபி நகர் அருகே மாணவர்களிடம் சிலர் கஞ்சா விற்பனை செய்வதாக காவல் ஆய்வாளர் முத்துக்குமரனுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல் துறையினர் தீவிர சோதனை நடத்தியதில் சந்தேகப்படும்படியாக சுற்றித்திரிந்த 3 பேரை அழைத்து விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையின் போது அவர்கள் மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து வந்ததும், அவர்களிடம் கஞ்சா பொட்டலங்கள் இருந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து 3 பேரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அந்த விசாரணையின் போது தினகரன், விசுவா மற்றும் ஒரு சிறுவன் என்பது தெரிய வந்தது. இவர்கள் பளவன்சாவடி பகுதியைச் சேர்ந்த கணேசன் என்பவரிடமிருந்து கஞ்சாவை வாங்கி விற்பனை செய்துள்ளனர். இதன் காரணமாக கணேசனையும் காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் 2.5 லட்சம் மதிப்பிலான 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதோடு, 4 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.