மாணவர்கள் கணித பாடத்தை எளிமையாக புரிந்து கொள்ளும் வகையில் இலவச ஆன்லைன் படிப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னை ஐ.ஐ.டியில் அவுட் ஆஃப் தி பாக்ஸ் திங்க்கிங் என்ற இலவச ஆன்லைன் படிப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது மாணவர்கள் எளிமையான முறையில் கணித பாடத்தை கற்பதற்காக தொடங்கப்பட்டுள்ளது. ஏனெனில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் பொதுவாக கணித பாடங்களை கற்றுக் கொள்வதற்கு மிகவும் சிரமப்படுகின்றனர். இதனால்தான் மாணவர்களுக்கு கணித பாடத்தை எளிதாக்குவதற்காக சென்னை ஐ.ஐ.டி சார்பில் புதிய இலவச ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப் பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை ஐ.ஐ.டி இயக்குநர் காமகோடி கூறியதாவது, இளைஞர்களுக்கு சிறந்த படைப்பு திறனை உருவாக்கும் நோக்கத்தோடும், சிக்கலான பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு, நுண்ணறிவுடன் ஒவ்வொரு விஷயங்களை நோக்குவதற்காக இலவச ஆன்லைன் படிப்பு தொடங்கப்பட்டுள்ளது என்றார்.
இந்த ஆன்லைன் படிப்புகள் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு மட்டுமின்றி, இளைஞர்கள் போட்டித் தேர்வில் கேட்கும் நவீன கணித வினாக்களுக்கு விடை அளிப்பதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதில் மொத்தம் 4 நிலைகள் இருக்கிறது. இதில் முதல் மற்றும் இரண்டாம் நிலை மாணவர்களுக்கு 30 மற்றும் 40 மணி நேரங்கள் வீடியோவாக பாடங்கள் நடத்தப்படும். அதன்பிறகு கிராமப்புறங்களில் படிக்கும் மாணவர்களுக்கு யு.எஸ்.பி டிரைவ் மூலமாக பாடத்திட்டங்கள் பதிவு செய்து கொடுக்கப்படும்.
இந்த பாடங்கள் தற்போது ஆங்கில வழியில் மட்டும் இருக்கும் நிலையில், தமிழ் மற்றும் மற்ற மொழிகளில் நடத்துவதற்கான நடவடிக்கைகள் விரைவில் எடுக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. இந்த வகுப்பில் சேரும் மாணவர்களுக்கு கணினி வாயிலாக பாடங்கள் நடத்தப்பட்டு நேர்முகத்தேர்வு நடத்தப்படும். அந்தத் தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு சான்றிதழும் வழங்கப்படும். இதற்கான விண்ணப்பதிவு மற்றும் கூடுதல் விவரங்களை Pravartak.org.in/out-of-box-thinking.html இன்று இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.