அனைத்து பள்ளிகளுக்கும் மே 14 முதல் கோடை விடுமுறை வழங்கப்படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் தற்போது கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் அதிகமாக வெப்பம் காணப்படுகிறது. தலைநகர் டெல்லி, தமிழகம், ஒடிசா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கோடை வெயில் கொளுத்தி வருகிறது. மேலும் ஒரு சில மாநிலங்களில் வெப்ப அலை வீசி வருகின்றது. கடந்த சில நாட்களாக பஞ்சாப் மற்றும் ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் வெப்பம் கடுமையாக அதிகரித்திருக்கின்றது.
அமிர்தசரஸில் அதிகபட்ச வெப்பநிலை 42.3 டிகிரி செல்சியசும், லூதியானாவில் 43.2 டிகிரி செல்சியசும் மற்றும் ஜலந்தரில் 42.7 டிகிரி செல்சியசும் பதிவாகியிருக்கின்றது. இந்த நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் வெப்பநிலையின் காரணமாக வருகின்ற மே 14-ஆம் தேதி முதல் அனைத்து பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை வழங்குவதாக அந்த மாநில அரசு அறிவித்துள்ளது.
மேலும் இது தொடர்பாக ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த பஞ்சாப் மாநில முதலமைச்சர் பகவான் சமூக வலைதளமான டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது, பஞ்சாப் மாநிலத்தில் நிலவி வரும் கடுமையான வெப்பம் காரணமாக ஆயிரக்கணக்கான பெற்றோர்களும் ஆசிரியர்களின் ஆலோசனைகளையும் கருத்தில் கொண்டு வரும் மே மாதம் 14ம் தேதி முதல் அனைத்து பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை அளிக்க முடிவு செய்யப்பட்டு இருக்கிறது என அவர் கூறியுள்ளார்.