2021-22 ஆம் கல்வியாண்டில் தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேர்ந்துள்ள முதலாமாண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் நேற்று முதல் திறக்கப்பட்டது. மேலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கல்லூரி விடுதிகளில் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும் மருத்துவக் கல்வி இயக்கம் தெரிவித்துள்ளது. அதன்படி கல்லூரி விழாக்கள் மற்றும் கூட்டங்கள் நடத்தவும், நூலகத்தில் கூட்டம் கூடவும் அனுமதி இல்லை என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேசமயம் அனைத்து மாணவர்களும் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை வகுப்பறைகளில் பின்பற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு மட்டுமில்லாமல் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% ஒதுக்கீட்டில் சேர்ந்துள்ள மாணவர்களிடம் எந்த காரணம் கொண்டும் கட்டணம் வசூலிக்க கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த மருத்துவ கல்வி இயக்குனர் நாராயண பாபு, “தமிழகத்தில் முதலாமாண்டு மருத்துவ மாணவர்கள் கல்லூரியில் சேருவதற்கான அவகாசம் பிப்ரவரி 16-ல் இருந்து பிப்ரவரி 18-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் கோரிக்கையை ஏற்று இரண்டு நாட்கள் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி 18-ஆம் தேதிக்குள் மாணவர்கள் சம்பந்தப்பட்ட கல்லூரிகளுக்கு சென்று தங்களுடைய சேர்க்கையை உறுதி செய்ய வேண்டும் என்று மருத்துவக்கல்வி இயக்குநர் நாராயண பாபு தெரிவித்துள்ளார். மேலும் இரண்டாம் கட்ட மருத்துவ கலந்தாய்வு மார்ச் முதல் வாரத்தில் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.