தமிழகத்தில் கடந்த 2 வருடங்களாக கொரோனா பரவல் காரணமாக பள்ளி-கல்லூரிகள் திறக்கப்படாமல் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்று வந்தது. மேலும் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து நடப்பாண்டு கொரோனா தொற்று குறைந்து வந்த நிலையில் மீண்டும் பள்ளி-கல்லூரிகள் திறக்கப்பட்டு வழக்கம்போல் வகுப்புகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் மீண்டும் கொரோனா தொற்று பரவல் உச்சம் தொட தொடங்கியதால் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
அதன்பின் கொரோனா குறைந்து வரும் நிலையில் கடந்த பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் பள்ளி-கல்லூரிகள் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இதற்கிடையில் பொதுத்தேர்வு குறித்த அறிவிப்புகளும் வெளியிடப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு தயாராகி வருகின்றனர்.
கொரோனா தொற்று காரணமாக பல மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டு இருந்ததால் அனைத்து சனிக்கிழமைகளிலும் பள்ளிகள் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் வருகிற 19 ஆம் தேதி சனிக்கிழமை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அதே நேரம் மார்ச் 20 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மேலாண்மை குழு கூட்டம் மற்றும் பெற்றோர் கூட்டம் நடைபெறும் எனவும் அதற்காக அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வருகை தர வேண்டும் எனவும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.