செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தமிழகத்தில் நீட் தேர்விற்காக இதுவரை ஏராளமான மாணவர்கள் தங்களுடைய உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர். தற்பொழுது சேலத்தில் தனுஷ், அரியலூரில் கனிமொழி ஆகிய இரண்டு மாணவர்களும் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்திருப்பது மிகப்பெரிய வருத்தத்தை அளிக்கிறது. மாணவர்கள் இது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என்று கெஞ்சி கேட்டுக்கொள்கிறேன்.
ஏனெனில் நீட்தேர்வு வைத்து அரசியல் செய்பவர்களை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். அரசியல் செய்து உணர்ச்சியை தூண்டி மாணவர்களை இந்த நிலைக்கு கொண்டு வந்துவிட்டார்கள். இதனை தமிழக மக்களும், பாஜகவும் ஒருபோதும் மன்னிக்காது. தமிழக சுகாதாரத்துறை அமைச்சராக இருக்கும் மா.சுப்பிரமணியன், வரச் சொல்லுங்கள் நாங்கள் இருவருமே தேர்வு எழுதுகிறோம் என்று நீட்விஷயத்தில் என்ன வைத்து காமெடி செய்தார். ஆரம்பத்தில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று மாணவர்களுக்கு நம்பிக்கையூட்டி கடைசியில் நேரத்தில் நீட் வருகிறது என்றால் அதனை மாணவர் எப்படி எதிர்கொள்வார்கள்.
இதற்கு முன்பு தமிழக அரசு பள்ளிகளில் இருந்து நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் வெற்றி பெற்று மருத்துவர்கள் ஆகியுள்ளனர். அதற்கு கடந்த அதிமுக அரசு ஒரு காரணம். ஆனால் தற்போதைய அரசு அரசியல் செய்யும் நோக்கத்தில், நீட் விஷயத்தில் எந்த ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கவில்லை. நீட் தேர்வு சமூக நீதிக்கு எதிரானதா? தமிழக மக்களுக்கு எதிரானதா? அப்படி எதுவுமே கிடையாது. எல்லா மாநிலங்களிலும் தேர்வு எழுதி வரும் நிலையில் இங்கு மட்டும் ஏன் பிரச்சனை செய்கிறார்கள்? எனவே நீட்டால் ஏற்பட்ட உயிரிழப்பக்கு திமுக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.