தமிழகத்தில் புதிதாக கட்டப்பட்ட 7 அரசு மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடத்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், தமிழகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள 11 மருத்துவக் கல்லூரிகளில், 7 மருத்துவ கல்லூரிகளில் 850 மாணவர்கள் சேர்க்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மீதமுள்ள மருத்துவமனைகளிலும் மாணவர் சேர்க்கையை நடத்த வலியுறுத்தியுள்ளோம்.
திண்டுக்கல், கிருஷ்ணகிரி, நாமக்கல், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள மருத்துவக் கல்லூரிகள் கட்டட பணிகளை சரிவர முடியவில்லை, அதனை மீண்டும் மத்திய அரசு ஆய்வு மேற்கொள்ள இருக்கிறார்கள். இன்னும் 10 நாட்களில் அந்த கட்டிட பணிகள் முழுமையாக முடிந்துவிடும். அந்த நான்கு கல்லூரிகளிலும் தலா 100 மாணவர்கள் சேர்க்கை நடைபெற உள்ளது.
விருதுநகர், கள்ளக்குறிச்சி, நீலகிரி ஆகிய மருத்துவமனைகளில் தலா 150 வீதம் 450 மாணவர்கள் சேர்க்கைக்கு, நாமக்கல், திருப்பூர், ராமநாதபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய இடங்களில் 100 மாணவர்கள் என மொத்தம் 850 மாணவர்கள் சேர்க்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது என்று அவர் கூறியுள்ளார். இது மாணவர்கள் மத்தியில் மகிழ்ச்சி தரும் செய்தியாக அமைந்துள்ளது.