பி.ஆர்க் படிப்பில் மாணவர் சேர்க்கைக்கு 12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றாலே போதும் என மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. அதன் காரணமாக மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. பெரும்பாலும் கல்லூரிகளும் முழுமையாக திறக்கப்பட்டுள்ளது.
மேலும் 12ஆம் வகுப்பு மாணவர்களை தவிர மற்ற வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெறுவதாக பல மாநில அரசு அறிவித்துள்ளது. ஆனால் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பாடங்கள் சரியாக நடத்தப்படாததால் 12ஆம் வகுப்பு மாணவர்கள் எவ்வாறு தேர்வு எழுதுவது என்பது பற்றி குழப்பத்தில் உள்ளனர்.
இந்நிலையில் பிஆர்க் படிப்பில் மாணவர் சேர்க்கைக்கு 12 ஆம் வகுப்பில் இயற்பியல், வேதியியல் மற்றும் கணித பாடத்துடன் தேர்ச்சி பெற்றாலே போதும் என அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார். மேற்கண்ட பாடங்களில் 50% மதிப்பெண் பெற தேவையில்லை. அதனைப்போலவே பத்தாம் வகுப்புக்குப் பிறகு மூன்று ஆண்டுகள் டிப்ளமோ படிப்பை முடித்தவர்களும் தேர்ச்சி பெற்றாலே போதும் என அவர் கூறியுள்ளார்.