மாணவர்களை ஏற்றி செல்லாத அரசு பேருந்தை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி ஜவ்வாது மலையில் சுமார் 30-க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் அமைந்துள்ளது. இந்த கிராமங்களில் வசிக்கும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் வாணியம்பாடி மற்றும் ஆலங்காயம் பகுதியில் இருக்கும் பள்ளிகளில் படித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த பகுதி வழியாக செல்லும் அரசு பேருந்துகள் மாணவர்களை ஏற்றிச் செல்வது இல்லை. இதனால் கோபமடைந்த அப்பகுதி மக்கள் ஆலங்காயம்- ஜமுனாமரத்தூர் சாலையில் அரசு பேருந்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது இந்த பிரச்சனைக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் உறுதியளித்து பிறகு பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர். இதனால் அப்பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.