தமிழகத்தில் இன்று பள்ளிகள் திறக்கப்படுவதால் மாணவர்கள் வகுப்பறைக்கு வெளியே சுற்றித் திரியக் கூடாது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறையாத நிலையில், மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இதனையடுத்து கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் திறக்கப்பட வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. மேலும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருப்பதால், பள்ளிகளைத் திறக்க தமிழக அரசு பரிசீலனை செய்தது.
அதனால் மாணவர்களின் பெற்றோர்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது. அதில் 90 சதவீதம் பெற்றோர்கள் பள்ளிகள் திறப்பதற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து இன்று முதல் தமிழகம் முழுவதிலும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப் படுகின்றன. அதனால் மாணவர்களுக்கு சில வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
அதன்படி அனைத்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், பணியாளர்களும் பள்ளி வளாகத்தில் உள்ளேயும் வெளியேயும் மாஸ்க் அணிவது கட்டாயம். அனைத்து மாணவர்களுக்கும் வைட்டமின் மாத்திரைகள் வழங்கப்படும். சமூக இடைவேளைக்கான விதிமுறைகள் முறையாக பின்பற்றப்பட வேண்டும். பள்ளியில் மாணவர்கள் வகுப்பறைக்கு வெளியே சுற்றித் திரிய அனுமதிக்கக் கூடாது.