அரசு பள்ளிகளுக்கு நேரில் சென்று தினமும் மாணவ-மாணவிகளில் செயல்பாடுகளை காவல்துறையினர் கண்காணிக்க வேண்டுமென்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அதிரடி உத்தரவிட்டுள்ளார்.
தேனி மாவட்டம், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கடந்த 21 ஆம் தேதி சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு பணிகள் குறித்து போலீஸ் அதிகாரிகளுக்கான ஆய்வுக் கூட்டம் நடந்துள்ளது. இந்த ஆய்வு கூட்டத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே தலைமை தாங்கியுள்ளார்.
இதில் தேனி மாவட்டத்திலுள்ள காவல் நிலையங்களில் நிலுவையிலுள்ள குற்ற வழக்குகள் மற்றும் புகார்களின் விவரங்களை போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு செய்துள்ளார். மேலும் விசாரணைக்கான கால தாமதங்களை குறித்து சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டுள்ளார்.
அதன் பின்னர் அவர் கூறியது, தேனி மாவட்டம் முழுவதுமாக சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் வராமல் தடுக்கும் வகையில் போலீசார்களின் பணி இருக்க வேண்டும். மேலும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், கஞ்சா, லாட்டரி சீட்டு விற்பனை செய்வதை முற்றிலுமாக தடுக்க வேண்டும். இதைத்தொடர்ந்து முக்கியமாக பள்ளி அருகில் போதைப் பொருட்கள் விற்பது தெரிய வந்தால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது, கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதை தொடர்ந்து காவல்துறையினர் பள்ளி மாணவ, மாணவிகளின் பாதுகாப்பை உறுதி படுத்துவதும் , அவர்களின் செயல்பாடுகளை கண்காணிப்பதிலும் தனிகவனம் செலுத்த வேண்டும். ஒவ்வொரு காவல் நிலையத்துக்கு உட்பட்ட அருகிலிருக்கும் அரசு உயர்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு தினமும் காலை, மாலை என இருவேளைகளிலும் போலீசார் செல்ல வேண்டும் .
அங்கு மாணவ, மாணவிகளின் செயல்பாடுகள் குறித்து கவனிக்க வேண்டும். மேலும் மாணவர்களின் ஒழுங்கீனமாக செயல்பாடுகள் இருந்தால் பள்ளி ஆசிரியர்களுடன் கலந்துரையாடி சம்பந்தப்பட்ட மாணவர்களின் பெற்றோர்களை அழைத்து அறிவுரை சொல்ல வேண்டும். மேலும் மாணவ மாணவிகளுக்கு தேவையான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டுமென்றும் அவர் கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து தேனி மாவட்டத்திலிருந்து, காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு அத்தி வரதர் தரிசன நிகழ்ச்சிக்கான பாதுகாப்பு பணிக்கு சென்றுவந்த 2 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 22 இன்ஸ்பெக்டர்கள், 6 சப்-இன்ஸ்பெக்டர்கள் உட்பட 562 காவல்துறையினருக்கு பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்களுக்கான பதக்கங்களை போலீஸ் சூப்பிரண்டு வழங்கியுள்ளார். மற்ற போலீசாருக்கான பதக்கங்களை போலீஸ் துணை சூப்பிரண்டுகள் வழங்க அவர்களது அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.