ஈரோடு மாவட்டம் சிக்கய்ய நாயக்கர் கல்லூரியில் மக்கள் சிந்தனை பேரவை சார்பாக கடந்த 12 தினங்கள் நடைபெற்ற புத்தக திருவிழா நேற்று நிறைவடைந்தது. இந்த நிறைவு நாள் நிகழ்ச்சிக்கு அம்மாவட்ட இந்து கல்வி நிலையம் தலைவர் கே.கே.பாலுசாமி தலைமை தாங்கினார். இதையடுத்து முன்னாள் அமைச்சர் அந்தியூர் ப.செல்வராஜ் எம்.பி, அ.கணேசமூர்த்தி எம்.பி., சென்னை புத்தக பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கதலைவர் எஸ்.வைரவன், சிக்கய்யநாயக்கர் கல்லூரி முதல்வர் எஸ்.மனோகரன் போன்றோர் வாழ்த்தி பேசினார்கள்.
அதன்பின் ஈரோடு முதன்மை நீதிபதி பி.முருகேசன் பரிசுகள் வழங்கி பேசினார். மேலும் விழாவில் விடுதலை போராட்ட தியாகியும் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான கி.லட்சுமிகாந்தன் பாரதி பங்கேற்று பேசினார். இவர் கூறியிருப்பதாவது “புத்தகம் என்பது ஒரு ஆசிரியரின் தவம், சிந்தனை. நம் கலாசாரம், பண்பாடு, மொழி, ஒழுக்கம் போன்றவற்றை பாதுகாப்பவர்கள் புத்தக ஆசிரியர்கள்தான். ஒவ்வொரு பள்ளியிலும், கல்லூரியிலும் நூலகம் செல்ல நேரத்தை ஒதுக்க வேண்டும். நூலக வகுப்பின் போது புது புத்தகத்தை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும்.
அவ்வாறு செய்வது மாணவர்களுக்கு புத்தக வாசிப்பை தூண்டும். உலகம் எங்கும் பெரும்பாலான சிந்தனையாளர்கள் இருந்தாலும் 2 பேரின் சிந்தனைகள் மட்டுமே நடைமுறைக்கு வந்து இருக்கிறது. அதில் ஒன்று காரல் மார்க்சின் கம்யூனிச சிந்தனை, மற்றொன்று தந்தை பெரியாரின் சமூகநீதி சிந்தனை ஆகும். இந்த சிந்தனை பிறந்தஇடம் ஈரோடு ஆகும்” என்று தியாகி லட்சுமிகாந்தன் பாரதி கூறினார். முன்பாக ஈரோடு மாவட்ட முதன்மை நீதிபதி பி.முருகேசன் பேசியதாவது “வானொலி, தொலைக்காட்சி, செல்போன்கள் என காலமாற்றத்தில் வந்த மின்னணு சாதனங்களால் புத்தகவாசிப்பு குறைந்து விட்டது. செல்போன்களால் குழந்தைகள் பல சீர்கேடுகளில் சிக்கி இருக்கின்றனர். இந்நிலை மாற குழந்தைகளுக்கு புத்தகங்களை அறிமுகப்படுத்த வேண்டும். இதற்கென வீடுகள்தோறும் நூலகங்களை அமைக்க வேண்டும்” என்று கூறினார்.