நாடு முழுவதும் புதிய கல்விக் கொள்கை அமல்படுத்தும் நடைமுறை தொடங்கியது. இந்த புதிய கல்விக் கொள்கையை பல தரப்பினரும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் ஏழை மக்களின் கல்வி பாதிக்கப்படும் என்றும் ஹிந்தி மொழி திணிக்கப்படுகிறது என்றும் பல விமர்சனங்களை கூறி வருகின்றனர். ஆனால் பிரதமர் மோடி குழந்தைகளின் எதிர்கால வாழ்க்கைக்காக தான் இந்த புதிய கல்வி கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்று கூறினார்.
மேலும் மாணவர்களுக்கு 5,8 10 மற்றும் 12 ஆகிய நான்கு வகுப்புகளுக்கும் பொதுத் தேர்வு நடத்தப்பட வேண்டும் என்ற அறிவிப்புக்கு எதிர்ப்புகள் வருகிறது. தற்போது தமிழகத்தில் இரு மொழிக் கொள்கை தான் அமலில் இருக்கிறது. இதற்கான ஒப்புதல் குறித்து தமிழக ஆளுநரிடம் அரசு கோரிக்கை வைத்துள்ளது. இந்நிலையில் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் 37 வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்வம், இந்திய சமூக அறிவியல் ஆராய்ச்சிக் கழகம் மற்றும் டெல்லி தலைவர் கனகசபாபதி ஆகியோர் கலந்து கொண்டனர்.
அதன்பிறகு பேசிய உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, தற்போது மீண்டும் பெண்கள் அதிக அளவில் படிக்கத் தொடங்கியுள்ளனர். மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் படித்து பட்டம் பெறுகின்றனர். பெரியார் கண்ட கனவு நிறைவேறி வருகிறது. தமிழகத்தில் தற்போதுள்ள இரு மொழி கொள்கைக்கு தமிழக ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும். அதனைப் போலவே மாணவர்கள் தங்கள் விருப்பப்பட்டால் இந்தி,தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் ஏதாவது ஒன்றை கற்கலாம். ஆனால் மூன்றாவது மொழியை கற்பதை கட்டாயப்படுத்தக்கூடாது என்று அவர் தெரிவித்துள்ளார்.