அரசு பள்ளிகளில் எமிஸ் பதிவு முறை தொடர்பான கேள்விகளுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழக பள்ளிகளில் மாணவ, மாணவியரின் பெயர், முகவரி, பதிவு, ஜாதி, பாலின விகிதம், தனிப்பட்ட தரவு, தேர்வுகள், உடல்நலம் போன்ற தரவுகளையும் ஆன்லைனில் பதிவு செய்ய ‘எமிஸ்’ என்னும் டிஜிட்டல் பதிவு நடைமுறைக்கு வந்துள்ளது. அரசு பள்ளி ஆசிரியர்கள் தினமும் இந்த முறையை கடைபிடிக்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. ஆனால்’எமிஸ்’ பதிவின்போது ஏற்படும் சர்வர் பிரச்சினை, நெட்வொர்க் கோளாறால் ஆசிரியர்களுக்கு கல்விப் பணியை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் மாணவ, மாணவியரின் வருகை பதிவினை தேர்வு செய்யவே பாதி நாள் போய் விடுகிறது, என்றும் மீதி இருக்கிற பாதி நாளில் என்ன செய்வது என்று புரியாமல் ஆசிரியர்கள் திகைத்து கொண்டிருப்பதாகவும் கருத்துக்கள் தெரிவிக்கின்றது. இந்நிலையில் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷிடம் எமிஸ் தொடர்பான கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு விளக்கம் அளித்த அமைச்சர், ‘எமிஸ்’டிஜிட்டல் பதிவு முறையின் போது தற்காலிக நெட்வொர்க் பிரச்சனைகள் ஒரு சில இடங்களில் இருக்கலாம்.
ஆனால்எமில் ஆப் பதிவு முறையால் ஆசிரியர்களுக்கு அதிக நேரம் விரயம் ஆகாது. வகுப்புகளுக்கு வந்துள்ள மாணவர்களைத் தவிர வராத மாணவர்களுக்கு அப்சென்ட் என்பதை கிளிக் செய்து கொள்ளலாம் அதேபோல் மாணவர்கள் ஜாதியை பதிவு செய்ய வேண்டும் என்றாலும் அவர்கள் கட்டாயம் சாதியைச் சொல்லித்தான் ஆக வேண்டும் என்பது இல்லை.
விருப்பம் உள்ளவர்கள் தங்களது ஜாதியை ஆசிரியரிடம் தெரிவிக்கலாம். விருப்பம் இல்லாத பட்சத்தில் எனக்கு விருப்பமில்லை என்பதை ஆசிரியரிடம் கூறிவிடலாம். மேலும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் அவர்களது சலுகைகளை பெற்றுக் கொள்ள அவர்களுக்கு ஜனநாயக உரிமை உள்ளது. அதை செய்ய வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது. அதனால் தான் ஜாதி பதிவு செய்யப்படும் அதுவும் சாதி பெயர் கேட்கப்படுவதில்லை, வகுப்புதான் கேட்கப்படும் என அவர் கூறியுள்ளார்.