தமிழகத்தில் அரசு பள்ளியில் 6 -12ம் வகுப்பு வரை பயின்ற மாணவிகளுக்கு மேற்படிப்பு பயில்வதற்கு உதவியாக மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. பட்டப்படிப்பு, பட்டய படிப்பு மற்றும் தொழிற்கல்வி ஆகியவற்றில் கல்வி பயின்று முடிக்கும் வரை மாதம் தோறும் மாணவிகளின் வங்கி கணக்கில் நேரடியாக ஆயிரம் ரூபாய் செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
கல்லூரி மாணவிகளுக்கு ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கும் திட்டத்தை வருகின்ற செப்டம்பர் 5ம் தேதி சென்னையில் முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதற்கு புதுமைப்பெண் திட்டம் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் 15 மாதிரி பள்ளிகள் மற்றும் 28 சீர்மிகு பள்ளிகளை தொடங்கி வைக்கவுள்ளார்.