சேலம் மாவட்டத்தில் உள்ள கீரப்பாப்பம் பாடியில் இருக்கும் அரசு உயர்நிலைப் பள்ளியில் 200-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு வீரவேல் என்பவர் கடந்த ஒரு ஆண்டாக ஆய்வக உதவியாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் வீரவேல் மாணவிகளை கேலி கிண்டல் செய்வதுடன் தவறான கண்ணோட்டத்துடன் பார்ப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து பள்ளியில் நடைபெற்ற பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டத்தில் மாணவிகளின் பெற்றோர் தலைமை ஆசிரியரிடம் வீரவேல் குறித்து புகார் அளித்தனர்.
பின்னர் கோபத்தில் பெற்றோர்கள் வீரவேலை பிடித்து சரமாரியாக தாக்கியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து அறிந்த போலீஸ் துணை கமிஷனர் லாவன்யா மற்றும் போலீசார் பள்ளிக்கு விரைந்து சென்று வீரவேலை மீட்டு விசாரணைக்காக சேலம் டவுன் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். மேலும் வீரவேலை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாக உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.