மதுரை மாவட்டத்திலுள்ள கருப்பாயூரணி பகுதியில் செயல்பட்டு வரும் அரசு உயர்நிலைப் பள்ளியில் புகார் பெட்டியில் கடந்த மாதம் கடிதம் ஒன்று கிடந்துள்ளது. அதில் மாணவிகளிடம் 2 ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் தவறாக நடந்து கொள்வதாக கூறப்பட்டிருந்தது. இது குறித்து அந்த பள்ளி தலைமை ஆசிரியர் ஊமச்சிகுளம் அணைத்து மகளிர் காவல்துறையினர் மற்றும் மாவட்ட குழந்தைகள் நலக்குழுவுக்கும் தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி இதுகுறித்து நடத்திய விசாரணையில் உடற்கல்வி ஆசிரியர் மற்றும் 2 ஆசிரியைகள் ஆகிய 3 பேர் மீதும் போக்சோ வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் போக்சோ வழக்கு செய்யப்பட்டதில் ஒரு ஆசிரியர் தென்மண்டல போலீஸ் ஐ.ஜியிடம் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், ஆசிரியர்களிடையே ஏற்பட்ட பகையில் தலைமை ஆசிரியர் மாணவிகளை வைத்து பொய் புகாரை அளித்ததாக கூறியுள்ளார். இது குறித்து ஊமச்சிகுளம் மகளிர் காவல்துறையினர் 2 மாணவிகள், அவர்களின் பெற்றோர் மற்றும் பள்ளிக்கூட ஆசிரியர்கள் ஆகியோரிடம் விசாரணை நடத்தினார். அந்த விசாரணையில் மாணவிகள், அந்த கடிதத்தை தலைமையாசிரியர் கூறியதால் தான் எழுதினோம் எனவும், எந்த ஆசிரியரும் எங்களிடம் தவறாக நடந்து கொள்ளவில்லை என்றும் கூறியுள்ளனர்.
மேலும் இதுகுறித்து நடத்திய விசாரணையில் தலைமையாசிரியர் சக ஆசிரியர்கள் மீது உள்ள பகையில் மாணவிகளை பயன்படுத்தியதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீஸ் சூப்பிரண்டு கூறியதாவது, இதனை தொடர்ந்து தலைமையாசிரியர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், போக்சோ சட்டத்தை தவறாக பயன்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.